குட்கா ஊழல்: 2 காவல் துறை அதிகாரிகள் உள்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு!

First Published Oct 10, 2017, 3:33 PM IST
Highlights
gudka corruption case registered against 17 by anti corruption wing


குட்கா விவகாரத்தில் 2 காவல்துறை அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு இயக்குநர் மஞ்சுநாதா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரத்தில் நேரடியாக லஞ்சம் பெற்றதாகக் கருதப்படுவர்கள் மீது மட்டுமே வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது என்று மஞ்சுநாதா கூறியுள்ளார். 

சென்னையின் புறநகர்ப் பகுதியான செங்குன்றத்தில் மாதவராவ் என்பவரின்  குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அது குட்கா குடோன் என்பதும், தடைசெய்யப்பட்ட பொருளாக இருந்த குட்காவை மறைமுகமாக விநியோகிப்பதற்கு உயர் அதிகாரிகளுக்கு அவர் லஞ்சம் கொடுத்ததும், அந்த விவரங்களை விலாவாரியாக  டைரியில் குறிப்பு எழுதி வைத்திருந்ததும் தெரியவந்தது. 

அந்த டைரியை கைப்பற்றிய அதிகாரிகள்,  இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அப்போது தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ், டிஜிபி அசோக் குமாருக்கு  அறிக்கை அளித்திருந்தனர். இது குறித்து தகவல் வெளியானதும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 

ஆனால் இதனை ஏற்க மறுத்த மாநில அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 27இல், உதவி ஆணையர் மற்றும் அதற்குக் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், செங்குன்றம் உதவி ஆணையர், வணிக வரித்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சியின் உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், மத்திய சுங்க அதிகாரிகள் மற்றும் போலீசார் என 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். 

இதனிடையே, சுகாதார அமைச்சர், டி.ஜி.பி., முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

click me!