
மத்திய கலால், சேவை வரித் துறை மற்றும் தமிழ்நாடு வணிக வரித் துறை கள அதிகாரிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) பயிற்சி தொடங்கியது.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய சுங்கம் மற்றும் கலால் பயிற்சி கழகம் சரக்கு மற்றும் சேவை வரிகள் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் மத்திய கலால், சேவை வரித் துறை மற்றும் வணிக வரித் துறையைச் சேர்ந்த சுமார் 60,000 கள அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
சேலம் மத்திய கலால், சேவை வரித் துறை சரகத்துக்கு உள்பட்ட ஈரோடு, நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் உள்ள 120 கள அதிகாரிகளுக்கும், சேலம் வணிகவரி மண்டல சரகத்துக்கு உள்பட்ட ஈரோடு, நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 200 கள அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
அந்தவகையில், முதல் குழுவுக்கான பயிற்சியை சேலம் மத்திய கலால், சேவை வரித் துறை இணை ஆணையர் எஸ்.ஞானகுமார், வணிக வரி துறை இணை ஆணையர் எம்.ரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முதல் குழுவில் இந்த இரு துறைகளைச் சேர்ந்த 80 கள அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள். ஒரு குழுவுக்கு 5 நாள்கள் கொண்ட பயிற்சி மொத்தம் 4 குழுக்களாக நடத்தப்படும்.
இதில் மாதிரி சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் சார்ந்த கருத்துக்கள், நடைமுறைகள் மற்றும் விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சி டிசம்பர் முதல் வாரத்துக்கு முன் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.