
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வை சேலம் மாவட்டத்தில் 198 தேர்வு மையங்களில் 300 தேர்வுக் கூடங்களில் மொத்தம் 88,969 தேர்வர்கள் எழுத உள்ளதாக ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் - 4 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியர் வா.சம்பத், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு வரும் நவம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 198 தேர்வு மையங்களில் 300 தேர்வுக் கூடங்களில் மொத்தம் 88,969 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இத்தேர்வை கண்காணிக்க 300 தலைமை கண்காணிப்பாளர்களும், துணை ஆட்சியர்கள் நிலையில் 28 பறக்கும்படை அலுவலர்களும், வட்டாட்சியர் நிலையில் 53 கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு நேர்மையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். விடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. காவல் துறையினரின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களில் குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேர்வாளர்களுக்கு செய்து தர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களுக்கான முன்னேற்பாடு பணிகளை துணை ஆட்சியர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள், தீயணைப்புத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை மற்றும் இதரத் துறை அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து இப்பணியை மேற்கொள்ள தக்க அறிவுரை வழங்கப்படுள்ளது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மு.தமிழ்ராஜன், உதவி ஆணையர் (கலால்) குமரேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமதுரைமுருகன், துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ரவிக்குமார், மாவட்ட மேலாளர் (பொது) சக்திவேல், மாவட்ட மேலாளர் (நீதியியல்) குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.