
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான வலைகோற் பந்தாட்ட போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் அழகப்பா பல்கலைக் கழக உடற்கல்வியியல் கல்லூரி அணிகள் வெற்றிபெற்றன.
காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான வலைகோற் பந்தாட்ட (ஹாக்கி) போட்டிகள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போட்டிகளை கல்வியியல் புல முதன்மையர் பி. சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர் ஆர். செந்தில்குமரன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆண்கள்,பெண்கள் பிரிவிலும் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.
ஆண்கள் பிரிவில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்லூரி அணி இரண்டாம் இடமும், பெண்கள் பிரிவில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி அணி இரண்டாம் இடமும் பெற்றது.
இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையே டிசம்பர் 27 முதல் 31ஆம் தேதி வரை அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பரிசளிப்பு விழாவில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சொ. சுப்பையா பரிசுகள் வழங்கிப் பேசினார்.
விழாவில் அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வி. பாலச்சந்திரன், கல்வியியல் கல்லூரி முதல்வர் எ.பாலு, உடற்கல்வித் துறை உதவிப் பேராசிரியை எ.ரூபி ஜெசிந்தா, போட்டி ஒருங்கிணைப்பாளர் காளிதாசன், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.