
இராமநாதபுரம்,
வடகிழக்கு பருவமழை எதிரொலியாக மாவட்டத்தில் உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களின் கையிருப்பு நிலவரம் குறித்து தயார் நிலையில் இருக்கின்றனவா என்று மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் உள்ள உணவு தானிய கையிருப்பு மற்றும் மருந்துகளின் கையிருப்பு ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக அவர் கமுதக்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கிற்கு சென்று அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் அளவு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை, உளுந்து உள்ளிட்ட உணவு தானியங்களின் தரத்தினை பார்வையிட்ட அவர் பொருட்களின் தேவை மற்றும் கையிருப்பு ஆகியவற்றை தொடர்ந்து கணக்கிட்டு போதிய அளவில் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் எனவும், சேமிப்பு வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் தரத்தினை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து பார்த்திபனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்து பொருட்களின் அளவு குறித்து ஆட்சியர் நடராஜன் ஆய்வு செய்தார்.
அப்போது மழைக்காலத்தில் வேண்டிய மருந்து பொருட்களை போதிய அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும், மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கும், அவற்றை பரவாமல் தடுப்பதற்கும் தொடர்ந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது பரமக்குடி துணை ஆட்சியர் சமீரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.