
சிவகங்கையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நவம்பர் 4-ஆம் தேதி தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “இம்மாவட்ட மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில் சிவகங்கை மாவட்ட அளவில் சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 4ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழ்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் போட்டிகள் நடைபெறும்.
இப்போட்டிகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 பேர் மட்டுமே இப்போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
போட்டிகளில் பங்குபெறும் மாணவ, மாணவியர் உரிய படிவத்தில் பள்ளித் தலைமையாசிரியரிடம் இருந்து அனுமதி பெற்று வரவேண்டும். போட்டிக்கு சரியாக காலை 9 மணிக்கு வரவேண்டும். போட்டிக்கான தலைப்பு தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் குறித்த வகையில் அமையும். தலைப்பு போட்டி தொடங்கும்நேரத்தில் அறிவிக்கப்படும். முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.
இதில், முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட அளவில் பரிசு பெறும் மாணவ, மாணவியர் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நீ. மேகநாதனை அணுகி தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.