மாநகராட்சி அறிவிப்பு.. வேகமெடுக்கும் கொரோனா கண்காணிப்பு.. திடீர் அறிக்கை..

By Thanalakshmi VFirst Published Dec 26, 2021, 8:33 AM IST
Highlights

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் தொடர்பான தகவல்களை சென்னை மாநகராட்சியிடம் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ள்ளார்.
 

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் தொடர்பான தகவல்களை சென்னை மாநகராட்சியிடம் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ள்ளார்.

ஏற்கனவே இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அனைத்து தனியார் மருத்துவமனைக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், மருத்துவமனை தனிமைப்படுத்துதலில் இருப்பதா, கொரோனா சிகிச்சை மையத்தில் இருப்பதா அல்லது வீட்டுத் தனிமையில் இருப்பதா என்பதை உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மருத்துவர்கள் முடிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஒரு நபர் மருத்துவரைக் கொண்டு இயங்கும் கிளினிக்குகள் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளுடன் வரும் நபர்கள் குறித்த தகவல்களை தெரியப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் தங்களிடம் வரும் கொரோனா நோயாளிகளின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை மாநகராட்சியின் மின்னஞ்சல் மூலம் அனுப்பவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு 14 நாட்கள் மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அதற்கு முன்னதாகவே அவரை வீட்டுத்தனிமைக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், சென்னை மாநகராட்சிக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நோயாளிகளுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் உள்ளனவா என்பதை தீர விசாரிக்காமல், தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது. 

எனவே, தனியார் மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்களின் மூலமாக வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர், வீட்டுத்தனிமையில் இருக்க கழிப்பறை வசதியுடன், நல்ல காற்றோட்டமுள்ள அறை இருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவரது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் மூலம், வீட்டுத்தனிமை சான்றிதல் பெற்றுக்கொண்டு, மருத்துவமனை தனிமைப்படுத்துதலை சிலர் தவிர்க்கிறார்கள் என புகார்கள் எழுந்த நிலையில், சென்னை மாநகராட்சி கண்காணிப்பை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

click me!