சேலம் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட விஷ்ணுவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கள்ளக்காதலர்களாக அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த கணவர் சதீஷ்குமார், மனைவியை கண்டித்துள்ளார்.
சேலத்தில் ரயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவரின் உடல்களை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வழியாக யஸ்வந்த்பூர்-புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் (16573) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் அதிகாலை 2.15 மணிக்கு சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு விருத்தாச்சலம் மார்க்கத்தில் சென்றது. சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷனை கடந்து, பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே சென்றபோது, தண்டவாளத்தில் ஆணும், பெண்ணும் எதிரே நடந்து வந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில், இருவர் மீதும் ரயில் மோதியபடி சென்றது. மின்னாம்பள்ளி ரயில்வே ஸ்டேஷனை கடக்கும்போது, நிலைய மேலாளரிடம் இன்ஜின் லோகோ பைலட், வரும் வழியில் ஒரு ஆணும், பெண்ணும் ரயிலில் பாய்ந்தனர் என தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
இதையடுத்து ரயில்வே அதிகாரிகள், சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரயில்வே போலீசார் அதிகாலை வேளையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு, ரயில் மோதியதில் கை துண்டாகி, தலை சிதைந்த நிலையில் வாலிபரும், உடல் சிதைந்த நிலையில் இளம்பெண்ணும் உயிரிழந்து கிடந்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், சேலம் அம்மாபேட்டை குண்டுபிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்த முருகேசன் மகள் சத்யா (23), அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் எதிரேயுள்ள சானிகுட்டை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஷ்ணு (27) என்பதும், இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும் தெரியவந்தது. இறந்த சத்யா, கடந்த 4 ஆண்டுக்கு முன் அம்மாபேட்டை நாமமலை தெற்கு காலனியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்கும் அஸ்வின் (2) என்ற மகன் உள்ளார்.
இச்சூழலில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் சேலம் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட விஷ்ணுவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கள்ளக்காதலர்களாக அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த கணவர் சதீஷ்குமார், மனைவியை கண்டித்துள்ளார். 3 மாதத்திற்கு முன் அம்மாபேட்டை போலீசிலும் புகார் கொடுத்துள்ளார். அதில், சத்யா தனது பெற்றோருடன் செல்வதாக கூறிவிட்டு மகன் அஸ்வினுடன் கணவரை பிரிந்து வந்துள்ளார். பெற்றோருடன் வசித்த நிலையில், சத்யா தனது கள்ளக்காதலன் விஷ்ணுவுடன் தொடர்பில் இருந்துள்ளார். அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக விஷ்ணுவுக்கு வேறு இடத்தில் திருமணம் முடிக்க பெண் பார்த்து வந்துள்ளனர். திருமண ஏற்பாட்டை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இதனால், ஒன்றாக தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, அதிகாலை வேளையில் வந்த ரயிலில் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடியான விஷ்ணு, சத்யா பாய்ந்துள்ளனர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தண்டவாள பகுதியில் இருந்து விஷ்ணு, சத்யாவின் சடலத்தை ரயில்வே போலீசார் மீட்டு, பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை வேளையில் நடந்த இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.