வேகமெடுக்கும் ஒமைக்ரான்... மீண்டும் ஆன்லைனில் வகுப்புகள்.... மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவர்கள் சங்கம் அட்வைஸ்!!

By Narendran SFirst Published Dec 27, 2021, 3:32 PM IST
Highlights

ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் வகுப்புக்களை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் வகுப்புக்களை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதை அடுத்து உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இருந்த போதிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான், தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. இதை அடுத்து இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 578 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக டெல்லியில் 142, மகாராஷ்டிராவில் 141, கேரளாவில் 57, குஜராத்தில் 49, தெலங்கானா 41, தமிழ்நாடு 34, கர்நாடகா 31 மற்றும் ராஜஸ்தானில் 43 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனிடையே ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளான டெல்லி, உத்தரப்பிரதேசம், அசாம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில், வரும் 31 ஆம் தேதி ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்தவுள்ளார். இதில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ வல்லுநர் குழு ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்திற்குப் பின் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் வகுப்புக்களை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் செந்தில் கூறுகையில், ஒமைக்ரான் வேகமாகப் பரவக்கூடிய வைரஸாக இருக்கிறது. இதனால் ஆரம்ப கட்டத்திலேயே சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு செய்தால், தொற்று பாதிப்பு அதிகமாவதைத் தடுக்க முடியும். பள்ளிக் குழந்தைகள் நேரடி வகுப்புக்கு செல்வதால் அதன் மூலம் இவ்வகை வைரஸ் பெற்றோர், வீட்டில் உள்ள இணைநோய் உள்ளவர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு விழா கொண்டாட்டங்கள், இறப்பு நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை தவிர்க்க இப்போதே ஒருசில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

click me!