Vaccination registration : சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு... ஜன.1 முதல் தொடக்கம்!!

By Narendran SFirst Published Dec 27, 2021, 2:28 PM IST
Highlights

இந்தியாவில் 15 முதல் 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் கோவின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 15 முதல் 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் கோவின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேம், மத்திய பிரதேசம் என அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. ஏற்கனவே கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியதை அடுத்து அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் புனே நகரில் உள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசி தயாரித்து வினியோகிக்கிறது. இதேபோன்று உள்நாட்டில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கி, தயாரித்து வினியோகம் செய்து வருகிறது. ஜனவரி 16 ஆம் தேதி முதல் இந்த இரு தடுப்பூசிகளையும் இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு போடும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்கியது.

மார்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதேநேரம் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்நிலையில் மே 1 ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், 12 முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறாருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளார். 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு அவசர பயன்பாட்டுக்கான பாரத் பயோடெக் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம், நிபந்தனைகளுடன் கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க பரிந்துரைத்தது. கொரோனா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை மற்றொரு நிபுணர் குழு மதிப்பீடு செய்தது. அதன்பிறகு பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தகவல்களை தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் கேட்டு பெற்றார்.

அதைத்தொடர்ந்து 12 முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கோவேக்சின் தடுப்பூசிக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அதேபோல, ஜன.10 ஆம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் 15 முதல் 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் கோவின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவின் இயக்குநர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பதிவு செய்ய, ஆதார் அட்டை இல்லாதவர்கள், 10ஆம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையைக் காட்டி முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!