
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பிளாட்பாரத்தில் ஏறி நின்றது. இச்சம்பவம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.
சென்னை மணலியில் இருந்து பிராட்வேக்கு மாநகர பஸ் (தஎ 64சி) இயக்கப்படுகிறது. நேற்று காலை மணலியில் இருந்து பஸ் புறப்பட்டது. ஏராளமான பயணிகள் அதில் பயணம் செய்தனர்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை போக்குவரத்து கமிஷனர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறிக்கெட்டு ஓடி திடீரென அங்குள்ள பிளாட் பாரத்தில் ஏறியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், அலறி கூச்சலிட்டனர். பின்னர், பஸ் நின்ற பிறகு, அனைவரும் இறங்கி தலை தெறிக்க ஓடினார்கள். அதிர்ஷ்டவசமாக, பயணிகள் காயமின்றி தப்பினர்.
தகவலறிந்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து ரெக்கவரி வாகனம் மூலம் பிளாட் பாரத்தில் ஏறிய மாநகர பஸ்சை அப்புறப்படுத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். அதில், பஸ்சில் பிரேக் பிடிக்காமல் போனதால் பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது தெரிந்தது.