
தனியார் தொழிற்சாலையில் ரசாயன குழாய் வெடித்ததில், தீ விபத்து ஏற்பட்டு 2 பேர் இறந்ததனர். ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு பிருந்தாவன் காலனியை சேர்ந்தவர் லட்சுமண ராவ். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை 5வது மெயின் ரோட்டில் வெல்டிங் ராடு தயாரிக்கும் மூலப் பொருள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு 3 ஷிப்டுகளாக ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.
நேற்று இரவு வடமாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் (24), மணவூரை சேர்ந்த முருகவேல் (34) உள்பட 3 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென ரசாயன கழிவுகள் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ரசாயன கழிவுகள் வெளியேறின.
அப்போது, ஊழியர்கள் வேலை செய்தபோது ஏற்பட்ட தீப்பொறி அந்த ரசாயனத்தில் விழுந்தது. இதில் குபீரென தீப்பிடித்து அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதற்கிடையில் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சன் இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புகாரின்படி அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.