அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 3-வது நாளாக சத்தியாகிரகப் போராட்டம். ஏன்?

First Published May 22, 2018, 10:39 AM IST
Highlights
Government Rubber Association workers are the 3rd day of Satyagraha struggle. Why?


கன்னியாகுமரி

சம்பளத்தை உயர்த்தக்கோரி அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 3-வது நாளாக கன்னியாகுமரியில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கீரிப்பாறையில் அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இந்தத் தோட்டத்தில் ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

இந்த தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை உயர்த்தி வழங்கக்கோரி வற்புறுத்தி வருகிறார்கள். இதற்காக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை சம்பளத்தை அரசு ரப்பர் கழகம் உயர்த்தி வழங்கவில்லை. 

சம்பளத்தை உயர்த்தி வழங்காத அரசு ரப்பர் கழகத்தை கண்டித்து தொழிலாளர்கள் சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மணலோடை அரசு ரப்பர் கழகத்திற்கு உட்பட்ட காளிகேசம் பிரிவு அலுவலகம் முன் நேற்று 3-வது நாளாக சத்தியாகிரக போராட்டம் நடந்தது. 

இந்தப் போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க துணை செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். காலை 9.30 மணிக்கு தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். பின்னர், மதியம் அங்கேயே கஞ்சி காய்ச்சி தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. 

இந்தப் போராட்டத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். இதில் மாநில இணை செயலாளர் இளங்கோ, சி.ஐ.டி.யு. தலைவர் நடராஜன், பிராங்கிளின் மற்றும் நிரந்தர பால் வடிப்பாளர்கள், களப்பணியாளர்கள் என ஆண் - பெண் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.  
 

click me!