ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்துக்கு ஆசைப்பட்ட சார் பதிவாளர் கைது; துணைபோனவரும் சிக்கினார்...

First Published May 22, 2018, 10:32 AM IST
Highlights
sub registrar arrested for 1000 rupees bribe


காஞ்சிபுரம் 

வீட்டு மனையை பதிவு செய்ய ரூ.1000 இலஞ்சம் வாங்கி காஞ்சிபுரம் சார் பதிவாளர் மற்றும் துணைபோன கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஆகிய இருவரை இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்த சங்கரன் (55) என்பவர் சார் பதிவாளராக உள்ளார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நித்யா என்ற பெண் நேற்று மதியம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். 

காஞ்சிபுரம் அருகே கூரம் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் வீடுகட்ட வீட்டு மனையை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சார் பதிவாளர் சங்கரனிடம் விண்ணப்பித்தார்.

அதற்கு அவர், ரூ.1000 இலஞ்சமாக கொடுத்தால்தான் வீட்டுமனை பதிவு செய்யப்படும் என்று நித்யாவிடம் கூறினாராம். ஆனால், இலஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத நித்யா, இதுகுறித்து காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட இலஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

சார் பதிவாளரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள், இரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை நித்யாவிடம் கொடுத்து அதை இலஞ்சமாக சார் பதிவாளரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

பின்னர் மாவட்ட இலஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சிவபாதசேகரன் தலைமையிலான இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள், காஞ்சிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று மறைந்திருந்தனர்.

நித்யா, சார்பதிவாளர் சங்கரனிடம் இலஞ்சமாக ரூ.1000 பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய அவர், அருகில் இருந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டரான காஞ்சிபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற பார்த்திபன் (30) என்பவரிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் பாய்ந்து சென்று, சார் பதிவாளர் சங்கரனையும், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பார்த்திபனையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இலஞ்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் இருக்கிறதா? எனவும், அங்குள்ள ஆவணங்களையும் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் ஆய்வு செய்தனர்.

click me!