எங்களுக்கு பயந்தே ஆட்சியாளர்கள் பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளனர் - கேப்டனையே மிஞ்சும் மிசஸ்.கேப்டன்...

First Published Jan 30, 2018, 8:28 AM IST
Highlights
government reduce the bus tariff cause of fear - premalatha vijayakanth


திருவள்ளூர்

தே.மு.தி.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றவுடன் ஆட்சியாளர்கள் பேரூந்து கட்டணத்தை குறைத்தது எங்களது பலத்தை காட்டுகிறது என்று திருவள்ளூரில் நடந்த போராட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த தெரிவித்தார்.

திருவள்ளூர் சந்தை வீதியில் தே.மு.தி.க. மேற்கு மாவட்டம் சார்பில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் பயணிக்கும் போராட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சேகர் தலைமை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது மாட்டுவண்டியில் நின்றுக்கொண்டு அவர் பேசியது:: "மக்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் மக்களுக்காக இறங்கி போராடும் கட்சியாக தே.மு.தி.க. உள்ளது.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று சொன்னவுடன் ஆட்சியாளர்கள் பேரூந்து கட்டணத்தை குறைத்தது எங்களது பலத்தை காட்டுகிறது.

சல்லிக்கட்டு பிரச்சனை வந்தபோது அலங்காநல்லூரில் முதல் முறையாக சல்லிக்கட்டு வரவேண்டும் என்று குரல் கொடுத்தது விஜயகாந்த்தான்.

கரும்பு விவசாயிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் கரும்பு ஆலைகள் முன்பு தே.மு.தி.க. முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இரண்டு நாள்களிலேயே கரும்புக்கான நிலுவைத்தொகை வழங்கப்படும் என்று ஆட்சியாளர்கள் அறிவித்தனர்.

பேருந்து கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சி நிலையானது கிடையாது. விரைவில் கவிழும்.

கடந்த 2000-ஆம் ஆண்டு வரை இலாபகரமாக இயங்கிய போக்குவரத்துதுறை தற்போது நட்டத்தில் இயங்க யார் காரணம்? எந்த ஒரு தனியார் பேருந்து முதலாளியும் நட்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது என்று கூறவில்லை.

பேருந்து கட்டணத்தை முழுவதுமாக குறைக்கும் வரை தே.மு.தி.க. தொடர்ந்து போராடும். தே.மு.தி.க.விடம் ஆட்சியை கொடுத்தால் இரண்டு ஆண்டுகளிலேயே அனைத்து துறையும் இலாபகரமாக மாற்றுவோம். ஊழல் இல்லாத ஆட்சியை தருவோம்" என்று அவர் பேசினார்.

click me!