
தூத்துக்குடி
உடன்குடி அனல்மின் திட்டத்தால் தென் மாவட்டங்களில் மின் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை உருவாகும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியை அடுத்த கல்லாமொழி கிழக்கு கடற்கரை சாலை அருகில் ரூ.7359 கோடி செலவில் 480 ஏக்கர் பரப்பளவில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு எந்திரங்களுடன் கூடிய புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. சென்னையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் உடன்குடி அனல் மின் நிலைய கல்வெட்டை திறந்து வைத்து, பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இதனையொட்டி உடன்குடியில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பேசினார். அதில், "உடன்குடியில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் வருகிற 2021-ஆம் ஆண்டுக்குள் நிறைவுப் பெற்று, செயல்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இங்கு அனல் மின் நிலையம் அமைப்பதன்மூலம் தென் மாவட்டங்களில் தொழில்வளம் பெருகும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். தென் மாவட்டங்களில் மின்தட்டுப்பாடே இல்லை என்ற நிலை உருவாகும்.
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், கிழக்கு கடற்கரை சாலை திட்டம், கிழக்கு கடற்கரை இரயில்பாதை அமைக்கும் திட்டம் போன்றவையும் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அனல்மின் நிலையம் அமைக்கும் பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த இடையூறும் இன்றி, பணிகள் துரிதமாக நடைபெறும்" என்று அவர் பேசினார்.
இந்த விழாவில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., மின்வாரிய தலைமை பொறியாளர் நடராஜன், திட்ட பொறியாளர் சுகிர்தன் தாஸ், பெல் நிறுவன பொது மேலாளர் சௌந்தர்ராஜன்,
உதவி மேலாளர் காசிராஜன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவி ஆயிஷா கல்லாசி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பெருமாள் மற்றும் பலர் பங்கேற்றனர்.