
திண்டுக்கல்
தங்கள் மகன் மீது காவலாளர்கள் அடிக்கடி பொய் வழக்கு பதிவு செய்து அழைத்துச் சென்றுவிடுகின்றனர் என்று ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் தீக்குளிக்க முயற்சித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று குறைதீர் கூட்டத்திற்கு ஏராளமான மக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர்.
அப்போது, ஒரு ஆணும், பெண்ணும் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். உடனே, அங்கு பாதுகாப்புக்காக நின்ற காவலாளர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் இருவரிடமும் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தீக்குளிக்க முயன்றவர்கள் திண்டுக்கல் சவேரியார் பாளையத்தைச் சேர்ந்த ராஜா (55), அவருடைய மனைவி நாகராணி (48) என்பது தெரிந்தது.
பின்னர் ராஜா, காவலாளர்களிடம், “நான் தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறேன். எனது மகன் ஜெயந்த் (24), பெயிண்டராக வேலை செய்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் காவலாளர்களால், ஜெயந்த் கைது செய்யப்பட்டார்.
பின்னர் எந்த பிரச்சனைக்கும் ஜெயந்த் செல்வது இல்லை. ஆனால், வெளியூரில் வேலை செய்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போதெல்லாம் ஜெயந்தை, காவலாளர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்று விடுகின்றனர். பொய் வழக்கும் பதிவு செய்கின்றனர்.
இதனால், எனது மகனின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தீக்குளிக்க முயற்சித்தோம்” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கும்படி, அவர்களை காவலாளர்கள் அறிவுரை கூறி அனுப்பினர்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை அளித்திவிட்டு அங்கிருந்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.