
தருமபுரி
தருமபுரியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் விநியோகம் செய்யப்படாததால் சினம் கொண்ட முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நிகழ்விடத்திற்கு ஓடிவந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை சமாதானப்படுத்தினார்.
தமிழகம் முழுவதும் ஒருபக்கம் கடுமையான வறட்சி நிலவுகிறது. மறுபக்கம் அடிக்கும் வெயிலுக்கு மக்களும் மண்புழு போல சுருண்டு விழுகின்றனர். இதில், தண்ணீர் தட்டுப்பாட்டாம் தமிழகத்தின் கிராமப் புற மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் ஜீவா நகரில் கடும் வறட்சியினால் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் மக்கள் கடும் வேதனைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பக்கத்து கிராமத்திற்கும் நடந்து சென்று பிடித்து வரும் இரண்டு, மூன்று குடங்கள் தண்ணீரை ஒரு வாரத்திற்கு பயன்படுத்தும் அவல நிலையில் இருக்கின்றனர்.
எனவே, சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சோகமான ஒன்று.
இதனால், சினம் கொண்ட முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் போராட்டத்தில் இறங்குவது என முடிவு செய்து, நேற்று பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்கள், சடுதியில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கையை போராட்டத்தின் மூலம் அழுத்தமாக பதிவு செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால், காவல் ஆய்வாளர் ஆனந்தவேல் ஆகியோர் ஊராட்சி அலுவலகத்திற்கு ஓடிவந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி “குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தனர்.
இதனைக் கேட்ட பெண்கள், தண்ணீருக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றால் அடுத்த முறை போராட்டம் இதைவிட பெரிதாக இருக்கும் என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் ஊராட்சி அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.