
கடலூர்
டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காடாம்புலியூர் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,
விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும்
தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 37 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமாக தங்களது போராட்டங்களை அரசிற்கு வலியுறுத்தி வருகின்றனர். எலிக்கறி திண்ணும் போராட்டம், குட்டிக் கரணம் அடிக்கும் போராட்டம், மண்டை ஓடு அணிந்து போராட்டம், சேலை கட்டி போராட்டம், நிர்வாண போராட்டம் என போராட்டங்கள் இன்னும் தொடர்கிறது.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் மக்கள், இளைஞர்கள், விவசாயிகள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் என ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக் கோரியும் பண்ருட்டி அடுத்துள்ள காடாம்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் முந்திரி, பலா ஒருங்கிணைந்த விவசாயிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது.
இதற்கு ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புலித்தேவன் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள் பலர் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துப் பேசினர்.
உண்ணாவிரத போராட்டத்தில் பண்ருட்டி, காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.