Omicron : ஓமைக்ரான் சோதனை - 3 மணி நேரத்தில் ரிசல்ட்… தமிழக அரசின் அதிரடியான அறிவிப்பு…

By Raghupati RFirst Published Nov 30, 2021, 11:07 AM IST
Highlights

ஓமைக்ரான் சோதனை முடிவை, 3 மணி நேரத்தில் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தென்னாப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில்  ‘ஓமைக்ரான்’  வகை தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அந்த வகை பாதிப்புகளை 3 மணி நேரத்திலேயே கண்டறியக் கூடிய, தக்பாத் (TAQPATH) எனப்படும் டெஸ்ட் கிட் மூலமான பரிசோதனையை, தமிழக அரசு தற்போது  அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில், தென்ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள் (இங்கிலாந்தும் சேர்த்து), போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், பிரேசில், பங்களாதேஷ், மொரிசியஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக RT-PCR பரிசோதனை செய்து, நெகட்டிவ் முடிவு வந்தால் மட்டுமே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். 

நெகடிவ் முடிவு வந்தவர்கள் 7 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 7 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருந்த பின்பு, 8-வது நாளில் மறுபடியும் RT-PCR பரிசோதனை செய்து நெகடிவ் முடிவு வந்தபிறகு அவர்கள்அடுத்த 7 நாட்களுக்கு தாமாக உடல்நிலையை கண்காணிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். பயணிகள் எவருக்கேனும் கோவிட் தொற்று கண்டறியப்பட்டால் கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், மாதிரிகள் முழு மரபணு வரிசைப்படுத்துலுக்கு உட்படுத்தப்பட்டு உருமாற்றம் உள்ளதா என கண்டறியப்படும் என்கிறார்கள்.

ஓமைக்ரான் பரவலை தடுக்கும் நோக்கில், சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ள, சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில், மொத்தம் 12 அரசு ஆய்வகங்களில் இந்த வகை பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் மரபணுவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா, குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவிலான மக்களுக்கு தொற்று உள்ளதா எனவும் கண்காணிக்கப்பட உள்ளது.

புதிதாக பரவத் தொடங்கியுள்ள ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றை, மரபணு பகுப்பாய்வு முறையில் கண்டறிய வழக்கமாக 7 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘TAQPATH’  எனப்படும் எனப்படும் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனையை மேற்கொண்டால், 3 மணி நேரத்திலேயே மரபணுவில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும். அதன் அடிப்படையில், உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்தி, விரைந்து உரிய சிகிச்சைகைகளை மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

click me!