
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் வீட்டுக்குச் சென்றக் கொண்டிருந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு துடித்துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கோயம்புத்தூரை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ளது பழையூர். இங்குள்ள அங்கண்ணன் வீதியைச் சேர்ந்தவர் மரியம்மாள் (75). இவர் நேற்று காலை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள சாலையை கடக்க முயன்றபோது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று மரியம்மாள் மீது மோதிவிட்டு, சாலையில் உள்ள தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு நின்றது.
மின்னல் வேகத்தில் பேருந்து மோதியதில் மரியம்மாள் தூக்கிவீசப்பட்டு பலத்த காயத்தோடு நிகழ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளார் வெற்றிவேல் முருகன் தலைமையில் காவலாளர்கள் சம்பவஇடத்திற்கு விரைந்துச் சென்று மரியம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து, பேருந்தை ஓட்டிவந்த காரமடை வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த முரளிசந்திரராஜ் (44) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.