
புதுக்கோட்டையில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த முகமது காசிம், முகமது காதர், முகமது சபியுல்லா உள்ளிட்ட 5 பேர் குற்றாலம் சென்று திருச்சி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.
கார், புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, அரசு பேருந்து ஒன்று திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலி மலை பிரிவு சாலையைக் கடக்க முயன்றது.
தேசிய நெடுஞ்சாலையில், கார் வருவதை கவனிக்காத பேருந்து ஓட்டுநர், சாலையைக் கடக்க எண்ணி சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக முகமது காசிம் உள்ளிட்டோர் வந்த கார் மீது பேருந்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் அனுப்பினர். பின்னர் அங்கு வந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த இருவரையும், திருச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.