
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைக்கு சொந்தமான 22 கப்பல்கள் பங்கேற்கும் கூட்டு கடற்பயிற்சி வங்கக் கடலில் இன்று தொடங்குகிறது. இதற்காக சென்னை துறைமுகத்துக்கு வந்த கப்பல்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் இந்த கூட்டு பயிற்சிக்கு மலபார் கூட்டு கடற்பயிற்சி என பெயரிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2–வது முறையாக வங்கக்கடலில் சென்னை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள கடற்பகுதிகளில் 2 கட்டங்களாக இந்த பயிற்சி நடைபெறுகிறது.
இந்த பயிற்சி கடந்த 7–ந் தேதி கேரள மாநிலம் கொச்சி அருகே அரபிக்கடல் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து வரும் 17–ந் தேதி வரை நடக்கிறது. அந்த வகையில் சென்னைக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் கூட்டு கடற்பயிற்சி இன்று தொடங்குகிறது.
சென்னையில் 3 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சியில் இந்தோ–ஆசிய பசிபிக் கடற்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 3 நாட்டு கடற்படை வீரர்களும் தொழில்நுட்ப ரீதியிலான கருத்துகளை பகிர்ந்துகொள்ள உள்ளனர்.
அத்துடன் ரோந்துப்பணி, உளவு பார்ப்பது, நீர்மூழ்கி கப்பல் போர் பயிற்சி, மருத்துவ நடவடிக்கைகள், கடலில் கப்பல் சேதத்தை தவிர்ப்பது, ஹெலிகாப்டர்களை இயக்குவது, கடலில் மிதக்கும் வெடி பொருட்களை கண்டுபிடித்து அழிப்பது, தேடல் மற்றும் பறிமுதல் தொடர்பான பயிற்சிகளில் வீரர்கள் ஈடுபட உள்ளனர்.