
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு நிறைவேற்றும் என்றும் , ஒரு சில இடங்களில் நீதிமன்ற வழக்கு, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நிறைவேற்றப்படாமல் இருக்கலாம். என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற கபடிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசுகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியில் கர்நாடக அரசு கூடுதலாக தண்ணீர் திறந்து விடுவதற்கு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது காவிரி நீர் பிரச்சினையில் சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி அதை அரசிதழில் வெளியிட வைத்தார். ஆனால் காவிரி நீர் பிரச்சினைக்காக காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்று குழுவும் இன்னும் அமைக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. அதில் தமிழக அரசு சார்பாக நமது வாதத்தை எடுத்து வைத்து வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு நிறைவேற்றும் என்றும்என உறுதி அளித்த முதலமைச்சர் , ஒரு சில இடங்களில் நீதிமன்ற வழக்கு, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நிறைவேற்றப்படாமல் இருக்கலாம். என்றும் கூறினார். ஆனால் இந்த திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2-ம் நிலை காவலர்கள் 13 ஆயிரத்து 200 பேரை நியமிப்பதற்கான எழுத்து தேர்வு முடிந்து உள்ளது. விரைவில் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். பதவி உயர்வு மற்றும் சில காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்..