
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதையடுத்து, முதன் முறையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுவதையொட்டி தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
பாஜக ஆட்சி பொறுப்பேற்று, பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டம் இதுவரை நடைபெறவில்லை.
இந்நிலையில் பிரதமர் – தலைமைச் செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், நிதி ஆயோக் சார்பில் தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுடன், அந்தந்த மாநிலங்களின் நிதி, சுகாதாரம், வேளாண், தொழில்துறை மற்றும் திட்டச் செயலாளர்களும் பங்கேற்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநாட்டில், மத்திய – மாநில அரசுகள் இணைந்து மாநிலங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச்செயலாளர்களை பிரதமர் மோடி ஒரே நேரத்தில் சந்திக்கிறார்.
இதில், ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை, மானியங்களை நேரடியாக வழங்குவது, விவசாயம், ஊட்டச்சத்து மேலாண்மை ஆகியவற்றில் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே பிரதமர் – தலைமைச் செயலாளர்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கிரிஜா வைத்தியநாதன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.