
மதுரை அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை , பெற்றோர்களே எரித்துக் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த வீராளம்பட்டியைச் சேர்ந்தவர் பெரிய கார்த்திகேயன் . இவரது மகளான சுகன்யா ஈரோடு அருகே உள்ள மருத்துமனை ஒன்றில் நர்ஸாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் சுகன்யாவுக்கும் ஈரோட்டைச் சேர்ந்த பூபதி என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.இருவரும் வேறு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சுகன்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய சுகன்யாவும் பூபதியும், கடந்த ஜனவரி மாதம் பெருந்துறையில் பதிவுத் திருமணம் செய்தனர். இந்நிலையில் சுகன்யாவின் பெற்றோர் காதல் திருமணம் செய்து கொண்ட சுகன்யா அவரது கணவர் பூபதி, பாட்டி பொன்னம்மாள் ஆகியோரை பேரையூர் அழைத்துச் சென்றனர்.
அப்போது சுகன்யாவின் தந்தை பெரியகார்த்திகேயன் பூபதியையும் அவரது பாட்டியையும் அங்கிருந்து அடித்து விரட்டியுள்ளனர். பின்னர் பூபதியை மறத்து விடுமாறு கார்த்தியேகன் கூற அதற்கு மறுப்பு தெரிவித்த சுகன்யாவை அவரது பெற்றோரே எரித்து கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து பூபதி போரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சுகன்யாவை எரித்துக் கொலை செய்ததாக, சுகன்யாவின் தந்தை கார்த்திகேயன், தாய் செல்லம்மாள், அத்தை லட்சுமி, அண்ணன் பாண்டி ஆகியோரை கைது செய்துள்ளனர்.