
மாமல்லபுரம் கடற்கரையில் செத்து கரை ஒதுங்கும் ராட்சத ஆமைகளை முறையாக புதைத்து அடக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.
மாமல்லபுரம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் கடல் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
கடந்த ஜனவரி மாதம், சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரு கப்பல்கள் மோதிக் கொண்டதால்தான் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வால், கடல் நீர் மாசடைந்து, அரிய வகை கடல் வாழ் ஆமைகள் தொடர்ச்சியாக உயிரிழந்தது. அவை மாமல்லபுரம் கடற்கரையில் இன்றும் ஒதுங்கி கொண்டுதான் இருக்கின்றன.
இப்படி இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளை, பேரூராட்சி நிர்வாகத்தினர் அதே இடத்தில் குழி தோண்டி புதைத்து விடுகின்றனர். ஆனால், இவை ஆழமாகக் குழி தோண்டி புதைக்கப்படுவது இல்லை. இதனால், புதைக்கப்பட்ட ஆமைகளை, நாய்கள் மோப்பமிட்டு மணலைத் தோண்டி அவற்றை வெளியே எடுத்து போட்டு விட்டுச் செல்கின்றன. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், வியாதிகள் பரவவும் வாய்ப்புகள் இருக்கிறது.
எனவே, இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளை வேறு இடத்தில் முறையாக ஆழமாகக் குழி தோண்டி புதைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.