
ஈரோடு
காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் நான்காவது நாளாக ஊரக வளர்ச்சித்துறை முடங்கி கிடக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
முழுநேர ஊழியர்களாக நியமிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறையின் உள்ளாட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
உதவி இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்பட மொத்தம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த 14–ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 678 பேர் தொடர் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.
இவர்களுடைய வேலை நிறுத்த போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. இதனால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முடங்கி காணப்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றில் ஈடுபட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அதன்படி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ரவிசந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில செயலாளர் பாஸ்கர்பாபு உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இந்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.