
வேலூரில் அதிமுக பிரமுகரும் தொழிலதிபருமான ஜி.ஜி.ரவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குப்பன் என்பவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
பிரபல தொழிலதிபரும் முன்னாள் அதிமுக கவுன்சிலருமான ஜி.ஜி.ரவி வேலூரை சேர்ந்தவர். இவருக்கு சொந்தமாக பெருமுகையில் பொறியியல் கல்லூரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இவருக்கும் வேலூரில் பிரபல ரவுடியாக வலம் வந்த அதிரடி மகா என்ற மகாலிங்கத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.ரமேஷை, மகாவின் கூட்டாளியான குப்பன் கும்பல் வேலூர் ஆற்காடு ரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
பின்னர், ஜி.ஜி.ரவி கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் போன்ற பல்வேறு புகார்களின் காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் ஜி.ஜி.ரமேஷை கொன்றதால் எப்படியும் தன்னை ஜி.ஜி.ரவி பழிதீர்ப்பார் என்று நினைத்த மகாவின் கூட்டாளி குப்பன், அதற்கு முன்னதாக ஜி.ஜி.ரவியை கொல்ல வேண்டும் என்று திட்டமிட்டதாக தெரிகிறது.
அதற்கேற்ப கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் காட்பாடி ரோட்டில் கிருஷ்ணஜெயந்தி ஊர்வலத்தின்போது, மகாவும், அவனது கூட்டாளி குப்பன் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் திடீரென புகுந்து, ஜி.ஜி.ரவியை வெட்ட முயன்றனர்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட ஜி.ஜி.ரவி தப்ப முயன்றபோது அவரது தலையில் வெட்டு விழுந்தது. தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் தப்பினார்.
அதேநேரத்தில் மகா கும்பலை ஜி.ஜி.ரவி ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் பிடியில் இருந்து குப்பனும் மற்றவர்களும் தப்பிவிட, மகா மட்டும் தப்பிக்க முடியவில்லை.
இதையடுத்து ஜி.ஜி.ரவியின் 2 மகன்களும் மகாவை கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்து ஜாமீனில் வெளிவந்தனர். இதேபோல், ஜி.ஜி.ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குப்பனும் அவனது கூட்டாளிகளும் ஜாமீனில் வெளியில் வந்து தலைமறைவாகினர்.
இந்நிலையில், வேலூர் அருகே நடைபெற்ற தனது நண்பரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற ஜி.ஜி.ரவியை அங்கு இருட்டில் மறைந்திருந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட குப்பன் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், போலீசார் அவரை வேலூர் ஜெ.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.