
ஆந்திராவில் இருந்து மதுரைக்கு காரில் கஞ்சா கடத்த உள்ளதாக, மதுரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் மதுரை பிரிவு, வாகன சோதனையில் ஈடுபட்டனர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இண்டிகோ கார் ஒன்றை சோதனையிட்டனர்.
இந்த சோதனையின்போது, காரில் போதைப்பொருள் இருப்பதைக் கண்ட போலீசார். அதனை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட் கஞ்சா சுமார் 150 கிலோ கொண்டது என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறினர்.
மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட, கோவையைச் சேர்ந்த பாண்டியன், திருப்பூரைச் சேர்ந்த பரமன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஷேக் அலாவுதீன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து மதுரை, உசிலம்பட்டி, தேனி உள்ளிட்ட ஊர்களில் சில்லரை வியாபாரிகளிடம் கொடுப்பதற்காக கஞ்சா கடத்தி வரப்பட்டது என்று போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, கடத்தப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.