
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தின் மேம்பாட்டுக்காக ஆசிய வங்கியிடம் இருந்து ரூ.27 கோடி நிதியுதவி பெறப்பட்டு சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்பட உள்ளது என்று ஆட்சியர் இன்னசென்ட்திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் கோடைவிழா - 2018 நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதற்கு மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்றார்.
மேலும், கோடைவிழா சிறப்பாக நடைபெற நிதி உதவி செய்த நன்கொடையாளர்களுக்கும், பல்வேறு போட்டியாளர்களுக்கும் , காட்சி அரங்குகளை அமைத்தவர்களுக்கும், சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கும் நினைவுப் பரிசுளைள வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியது, "நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை விழா மே 2-ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
நீலகிரி அகவை 200, நைட் பஜார், புகைப்படக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி, கூடலூரில் வாசனைத் திரவியக் காட்சி, உதகையில் ரோஜா காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன.
உலகப்புகழ் பெற்ற உதகையின் 122-வது மலர்க்காட்சி கடந்த 18-ஆம் தேதியன்று முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு ஐந்து நாள்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் தலைமையேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
சுற்றுலாத் துறை மற்றும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தப்பாட்டம், மாவட்ட பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனங்கள், பரத நாட்டியம், காவடி ஆட்டம், துடும்பாட்டம், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்றவை சிறப்பாக நடைபெற்றன.
மாவட்டத்தின் மேம்பாட்டுக்காக சுற்றுலாத் துறை மூலம் ஆசிய வங்கியிடம் ரூ. 27.27 கோடி நிதியுதவி பெறப்பட்டு சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகளான கழிவறைகள், தகவல் பலகைகள், அலங்கார மின்விளக்குகள் போன்றவை செயல்படுத்தப்படவுள்ளன.
2017-18 ஆம் ஆண்டில் சுற்றுலா வளர்ச்சி நிதியின் கீழ் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலைகளை மேம்படுத்த ரூ. 2.85 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தாண்டில் ஏப்ரல், மே மாதங்களில் உதகைக்கு 8,81,037 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 17,500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிந்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.