
பெரம்பலூர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தொகுதி 2 ஏ- தேர்வுக்கான இலவச பயிற்சி மே 26 முதல் வழங்கப்பட உள்ளது என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பலர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி 2 ஏ-வில் அடங்கிய 1953 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு இணையதளம் மூலமாக மே 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வை எழுத உள்ளோருக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மே-26 ஆம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுய விவரக் குறிப்பு, மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் மே 25-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.