
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் கோடை விடுமுறையை களிக்க கடந்த 4 நாள்களில் 32 ஆயிரத்து 400 சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று கண்டு ரசித்துள்ளனர்.
தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாதலங்களில் கன்னியாகுமரியும் முக்கியமானது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவர். அதுவும் கோடைக் காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. கூட்டம் அள்ளும்.
அதுவும், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்க்க செல்பவரின் கூட்டம் எப்பவும் கூடுதலாகவே இருக்கும். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் மூன்று படகுகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்க்கச் செல்பவர்களுக்காகவே இயக்கப்படுகிறது.
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுப் போக்குவரத்து நடைபெறுவது வழக்கம். தற்போது, கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை கூடியுள்ளது. இவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு ஏறிச் சென்று விவேகானந்தர் மண்டபத்தை கண்டுவிட்டு வருகின்றனர்.
கோடை விடுமுறை களிக்க கடந்த நான்கு நாள்களில் மொத்தம் 32 ஆயிரத்து 400 பேர் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை கண்டு ரசித்துள்ளனர்.