Minister Ramakrishnan : திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி காலத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த முன்னாள் அமைச்சர் இ. ராமகிருஷ்ணன் உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
செங்கல்பட்டு அருகே உள்ள மதுராந்தகம் என்ற ஊரில் உள்ள பெரும்பாக்கம் என்கின்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் முன்னாள் அமைச்சர் ராமகிருஷ்ணன். மருத்துவரான இவர், திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இருப்பினும் அதற்கு அடுத்தபடியாக வந்த 1989 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இந்த சூழலில் அப்பொழுது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களுடைய தலைமையிலான அமைச்சரவையில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இ. ராமகிருஷ்ணன் அவர்கள் பதவியேற்றார்.
ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்த ராமகிருஷ்ணன், மீண்டும் 1991ம் ஆண்டு "அச்சரப்பாக்கம்" சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து 1991ம் ஆண்டு தொடங்கி, 1995ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும் ராமகிருஷ்ணன் தொடர்ந்து அதிமுகவில் பயணித்து வந்தார்.
கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று தனது 76 வது வயதில் காலமானார். இந்த செய்தி அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அதிமுகவிற்கு ராமகிருஷ்ணனின் இழப்பு, மிகப்பெரிய இழப்பாக மாறியுள்ளது.
தமிழகம் உள்பட இந்திய முழுவதும் 7 கட்டமாக வரவிருக்கும் மக்களவை தேர்தல் நடத்தப்படவுள்ளது. 40 தொகுதிகளை கொண்டிருந்தாலும் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களை சந்தித்து பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர்.