
திருச்சி,
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு ஒரு வாரத்திற்குள் வர இருப்பதால், மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பதவி விலகியபோது முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு நான்காவது முறையாகவும் முதலமைச்சராகும் வாய்ப்பு வரும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சியில் இருந்து சென்னை திரும்பும் வழியில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“ஏற்கனவே ஜெயலலிதா இருந்தபோது 5 ஆண்டுகால ஆட்சியில் பாலைவனத்தில் இருப்பது போலத்தான் மக்கள் இருந்தார்கள். இப்போது அதைவிட மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் யார் முதல்-அமைச்சர் என்ற போட்டி, மிகவும் கேவலமான கோமாளிகளின் கூத்தாக நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கு இடையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு டைரக்ஷன் கொடுத்து இருக்கிறார்கள். ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது போடப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் என தண்டனை வழங்கினார்கள். அந்த வழக்கு மீதான மேல் முறையீட்டின் தீர்ப்பு ஒரு வாரத்திற்குள் வர இருக்கிறது.
மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பதவி விலகியபோது எல்லாம் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். ஆக மீண்டும் 4-வது முறையாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு அந்த வாய்ப்பு வரும் என நான் நினைக்கிறேன்.
திடீரென நேற்று இரவு மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் உடல் நலன் பாதிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டு இருந்தால் நலம் பெற்று வர வேண்டும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. ஆனால், இன்று அதே அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிடுகிறது என்றும் ஒரு செய்தி வந்திருக்கிறது.
எல்லாவற்றையும் கூட்டிப்பார்க்கின்றபோது, ஏதோ ஒரு மிகப்பெரிய மர்மம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, இதற்கெல்லாம் மக்களிடத்தில் பதில் சொல்லும் காலம் மிக விரைவில் வரும்.
திமுக இதையெல்லாம் ஆதாயமாகவோ, நஷ்டமாகவோ பார்க்கவில்லை. எங்களுடைய கடமையை ஜனநாயக ரீதியில் தொடர்ந்து செலுத்தி வருகிறோம்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளி வைக்கப்படுவது அதிமுகவின் பலவீனத்தை காட்டுகிறது.
இன்று வாட்ஸ் அப்பில், ‘ஒரு ஓட்டுப் போட்டோம், 3 முதல்-அமைச்சர்களை பார்த்துவிட்டோம், விரைவில் 4-வது முதல்-அமைச்சரை பார்க்கப்போகிறோம்’ என்று ஒரு செய்தி வந்திருக்கிறது.
இது ஓட்டளித்த மக்களின் இன்றைய மனநிலையாக இருக்கிறது.” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
பின்னர், மு.க.ஸ்டாலின் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.