
காஞ்சிபுரம்
இந்தியாவில் முதன்முறையாக காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த வட நெம்மேலி முதலைப் பண்ணைக்கு அமெரிக்க இராட்சத உடும்பு ஒன்று வரவழைக்கப்பட்டு உள்ளது. அரியகை உடும்பு என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்கப்படுகிறது.
சென்னை - மாமல்லபுரம் இடையே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள வடநெம்மேலியில் முதலைப் பண்ணை ஒன்று உள்ளது. இங்கு 2000-க்கும் மேற்பட்ட அரியவகை முதலைகள் உள்ளன.
பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் உயிரியல் பூங்காக்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இங்கிருந்து முதலைகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. தற்போது வடநெம்மேலி முதலைப் பண்ணைக்கு புதிதாக பல்லி இனத்தைச் சேர்ந்த அரியவகை இராட்சத உடும்பு ஒன்று வரவழைக்கப்பட்டு உள்ளது.
இந்தவகை உடும்புகள் இந்தோனேசிய தீவுகளில் இயற்கைச் சூழலில் வசிக்கின்றன. ஒன்றரை மீட்டர் நீளமுள்ள இவ்வகை உடும்பு மூன்று மீட்டர் நீளத்திற்கு வளரும். இந்த இராட்சத உடும்பானது எலி, பறவைகள், ஆடு, மாடுகள் போன்றவற்றை இரையாக உட்கொள்ளும்.
இவற்றின் பற்கள் சுறா மீனின் பற்களைப் போன்று கூர்மையானவை. எதிரிகள் தாக்க வரும்போது, எதிரியின்உடலை நார் நாராக கிழிக்கும் தன்மை கொண்டவை. முதலைப் பண்ணையில் தனிக்கண்ணாடி அறையில் இவற்றை அங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு பாதுகாத்து வருகின்றனர்.
இந்தியாவில் எங்கும் காணக் கிடைக்காத இந்த இராட்சத வகை உடும்பு தற்போது அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இருந்து வடநெம்மேலி முதலைப் பண்ணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.