கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள் குறித்த ஆளுநரின் கருத்துக்கு உணவு என்பது அவரவர் உரிமை என அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, அம்மாவட்டத்துக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழக ஆளுநர் ரவி சென்றிருந்தார். திருவண்ணாமலை கோவிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த அவர், கிரிவலப் பாதையில் நிருதிலிங்கம் என்ற இடத்திலிருந்து திரு நேர் அண்ணாமலை என்ற இடம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தனது குடும்பத்துடன் கிரிவலம் நடந்து சென்றார்.
அதன்பிறகு ஆளுநர் ரவி வெளியிட்ட அறிக்கையில், “அருணாச்சலேஸ்வரர் கோவிலின் அருகாமையில் கிரிவலப் பகுதியில், போதிய கழிவறைகள் இல்லாததை அறிந்தும் அசைவ உணவு விற்கும் உணவகங்கள் இருப்பதைப் பார்த்தும் வருத்தமடைந்தேன். உணவு என்பது முழுக்க முழுக்க ஒருவரது தனிப்பட்ட விருப்பம் என்று நான் நம்புகிறேன். அது அவ்வாறே இருக்க வேண்டும். அதே சமயம் அருணாச்சலேஸ்வரரின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆளுநர் ரவி, திருவண்ணாமலை வருகையின் போது கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார். திருவண்ணாமலை நகரின் மையபகுதியில் அமைந்துள்ள அய்யங்குளம் குளக்கரை புனரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் வைப்பதும், அவற்றில் சாப்பிடுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். உணவு என்பது அவரவர் உரிமை. கிரிவலம் வரும் நேரங்களில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அசைவ உணவையும், உணவகங்களையும் தவிர்க்க வேண்டும். உணவு சாப்பிடுவோரின் தனிப்பட்ட விருப்பத்தில் நானோ அல்லது அரசோ தலையிட முடியாது. அரசாங்கம் இதற்கு உத்தரவு போட முடியாது. பவுர்ணமி தினத்திலும், கார்த்திகை தீபத்தின் போதும் அசைவ உணவகங்களை அவர்களே மூடிவிடுகின்றனர்.” என்றார்.