எட்டு நாள்களாக நடைப்பெற்ற மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது - இன்று முதல் கடலுக்கு செல்கின்றனர்...

First Published Mar 10, 2018, 11:03 AM IST
Highlights
Fishermen walked out for eight days - from sea to sea today ...


புதுக்கோட்டை 

எட்டு நாள்களாக நடைபெற்ற ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்ப பெற்றதைத் தொடர்ந்து இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். 

இவர்கள் முதல் நாள் கடலுக்கு சென்று மீன்பிடித்துவிட்டு, அடுத்த நாள் கரைக்கு திரும்பிவிடுவார்கள். ஆனால், காரைக்கால் மீனவர்கள் கடல் பகுதியில் தொடர்ந்து 4 முதல் 5 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுகின்றது. இதனால் தினசரி மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை தடுத்து நிறுத்த மீன் வளத்துறையினருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை கடலுக்கு சென்று மீன் பிடிக்காமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, கடந்த 2-ஆம் தேதி முதல் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 8-வது நாளாக நடைபெற்றது. 

தற்போது, "மீன் வளத்துறையினர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளதன் அடிப்படையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்றனர். இதனால் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். 
 

click me!