
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் கடந்த மாதம் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட தந்தை, மகனை காவலாளர்கள் கைது செய்தனர். மேலும், அவர்கள் திருடிய நான்கு மோட்டார் சைக்கிள்களையும் மீட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரம், கிராஸ்கட் சாலையில் உள்ள ஒரு வங்கியின் வளாகத்திற்குள் இருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கடந்த மாதம் 29-ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கொள்ளை முயற்சி நடைப்பெற்றது.
இந்த கொள்ளை முயற்சியின்போது கண்காணிப்பு கேமராவின் வொயர்களை துண்டித்துவிட்டு, கடப்பாரையால் எந்திரத்தை உடைக்க முயன்றபோது எச்சரிக்கை மணி அடித்தது. இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவின்பேரில், துணை ஆணையர் பெருமாள், உதவி ஆணையர் சோமசேகர் ஆகியோரின் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் இருளப்பன், மரியதாஸ், தனசேகரன், யூசுப், ஏட்டு ஆல்பர்ட் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
கொள்ளையர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததைத் தொடர்ந்து கிராஸ்கட் சாலையில் உள்ள அனைத்து விடுதிகளிலும் காவலாளர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கொள்ளையில் தொடர்புடைய ஆசாமிகள் ஒரு விடுதியில் ஆதார் அடையாள அட்டையை கொடுத்து வேலை கேட்டுள்ளனர். ஆனால், பிறகு வருகிறோம் என்று கூறிவிட்டு சென்றவர்கள்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கிராஸ்கட் சாலை பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியதிலும் இந்த ஆசாமிகளுக்கு தொடர்பு இருந்தது இந்த விசாரணையில் கண்டறியப்பட்டது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை வைத்து உக்கடம் பகுதியில் காவலாளர்கள் கண்காணித்தனர். அப்போது, திருட்டு மோட்டார் சைக்கிளை உக்கடம் பகுதியில் விற்க முயன்றபோது காவலாளர்கள் அந்த இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
காவலாளர்களின் விசாரணையில், பிடிபட்டவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி பாரதி நகரை சேர்ந்த பெருமாள் (57), அவருடைய மகன் தஷ்மந்த் ஜனித்தன் (23) என்றும் தெரியவந்தது. இவர்கள் மீது நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
கடன் தொல்லை காரணமாக புத்தேரியில் இருந்து கோயம்புத்தூர் வந்து தங்கியிருந்து திருட்டு குற்றங்களில் ஈடுபட்டதாக காவலாளர்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.
கிராஸ்கட் சாலை பகுதியில் அவர்கள் திருடிய நான்கு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.2½ இலட்சம். மோட்டார் சைக்கிளை பூட்டாமல் சாவியுடன் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளை பார்த்து இவர்கள் திருடி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து காட்டூர் குற்றப்பிரிவு காவலாளர்கள் வழக்குப்பதிந்து தந்தை-மகன் இருவரையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.