
சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்காத தந்தையை மகன் துப்பாக்கியால் சுட்டு கொன்றான். அதை தடுக்க வந்த பாட்டியும் துப்பாக்கி சூட்டில் இறந்தார். இச்சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு அருகே உள்ளது சித்தோடு கிராமம் அடுத்த வசுவப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (55). ஈரோடு மேட்டூர் ரோட்டில் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் சந்தோஷ்குமார் (23). ஈரோட்டில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவர்களுடன் பழனிச்சாமியின் தாய் பாவாயி (75) வசிக்கிறார்.‘
கடந்த சில மாதங்களாக பழனிச்சாமிக்கும், அவரது மகன் சந்தோஷுக்கும் இடையே சொத்து பிரித்து கொடுப்பது தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதில், சொத்தை எழுதி கொடுக்கும் எண்ணம் தற்போது இல்லை என பழனிச்சாமி கூறிவந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் தனது தாயார் பாவாயியுடன் பழனிச்சாமி பேசி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சந்தோஷ், மீண்டும் சொத்து தொடர்பாக பேசியுள்ளார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், வீட்டில் இருந்த துப்பாக்கியை கொண்டு வந்து, தந்தையை சுட்டு கொன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாட்டி பாவாயி, அலறியடித்து கொண்டு ஓடிவந்தார். அவரையும், சந்தோஷ் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றார். இதில், 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.
தகவலறிந்து சித்தோடு மற்றும் பவானி, ஈரோடு ஆகிய காவல் நிலையங்களில் இருந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சந்தோஷை வலைவீசி தேடி வருகின்றனர்.