
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு விசுவாசம் காட்டி, தம்மை ஓரம் கட்ட நினைக்கும் எடப்பாடிக்கு, தமது ஆதரவாளர்கள் மூலம் நெருக்கடி கொடுத்து வந்தார் தினகரன்.
ஒரு கட்டத்தில், தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் பயன்படாத ஆட்சியை கவிழ்ப்பது என்ற முடிவுக்கும் அவர் வந்து விட்டார்.
அப்படி ஒரு வேளை ஆட்சி கவிழ்க்கப்பட்டால், அது பாஜகவுக்கு சாதகமாகிவிட கூடாது என்றும் முடிவெடுத்த தினகரன், தமது ஆதரவாளர்கள் மூலம் ஸ்டாலினிடம் ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்தி கொண்டார்.
அதற்காக, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி எம்.எல்.ஏ க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோரை அவர் பயன்படுத்தி கொண்டார் என்று கூறப்படுகிறது.
அண்மையில் ஸ்டாலினை சந்தித்த இம்மூன்று எம்.எல்.ஏ க்களும், வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவதற்கு, அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாக கூறினர்.
ஆனால், உண்மை அதுவல்ல. ஒருவேளை எடப்பாடி ஆட்சி கவிழ்க்கப்பட்டால், அடுத்து திமுக ஆட்சி அமைக்க உரிமை கோரா வேண்டும் என்றும், அதற்கு தினகரன் அணி எம்.எல்.ஏ க்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற தகவலை சொல்வதற்கே அவர்கள் ஸ்டாலினை சந்தித்ததாக கூறப்படுகிறது.
அதிமுக சார்பில் யார் முதல்வராக வந்தாலும், அவர்களை மத்திய அரசுவளைத்து, சசிகலா குடும்பத்திற்கு எதிராக திருப்பி விடுகிறது. அவர்களும் ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், டெல்லியின் விசுவாசியாக மாறி விடுகின்றனர்.
அதன்மூலம், டெல்லி தன்னுடைய காரியத்தை சாதித்து கொள்கிறது. ஆனால் திமுக ஆட்சி என்றால், அங்கே டெல்லி மூக்கை நுழைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இதை எல்லாம் மனதில் வைத்தே, ஸ்டாலினோடு ஒரு நெருக்கத்தை உருவாக்க நினைத்த தினகரன், பேரறிவாளன் பிரச்சினையை முன்வைத்து தமது, ஆதரவு எம்.எல்.ஏ க்கள் மூலம் சொல்லவேண்டியதை சொல்லி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அதற்கு ஒரு சாதகமான பதில் கிடைத்ததை அடுத்து, தூது சென்ற மூவர் அணிக்கு, முரசொலி பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ஸ்டாலின் அழைப்பு விடுத்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.