விளைந்து நின்ற பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை; போட்ட காசு கூட எடுக்க முடியாத சோகம்...

First Published Dec 20, 2017, 8:49 AM IST
Highlights
Farmers worry about hazardous crops damaged crops Do not get the money


சிவகங்கை

சிவகங்கையில் விளைந்து நின்ற பயிர்களை இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் பயிர்களுக்கு செலவழிக்க பணத்தை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள ஓடாத்தூர், சிறுவனூர், பிரான்குளம், நண்டுகாச்சி, எஸ்.வாகைக்குளம், நாச்சியாரேந்தல், சேந்தநதி ஆகிய பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன.

இங்கு ஆண்டுதோறும் சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நிலக்கடலை பயிரிடப்படுவது வழக்கம். இந்த நிலையில் பருவமழை பொய்துப் போனதால் கடந்த சில ஆண்டுகளாக மேற்கண்ட பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலை பயிரிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.

ஒரு சில விவசாயிகள் மட்டும் கடந்த ஆண்டு நிலக்கடலை பயிரிட்டிருந்தனர். அதுவும் நல்ல விளைச்சலாகி பயனுக்கு வரும்போது பூச்சித் தாக்குதலாலும், காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதாலும் செலவழித்த தொகையை கூட எடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து குறித்து வேளாண் துறை அலுவலர்களிடம் முறையிட்டபோது, "விளை நிலத்தில் தொடர்ந்து ஒரே பயிரை பயிரிடுவதால் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகி உரிய பலனை அடைய முடியாமல் போகிறது. எனவே, மாற்றுப் பயிர்களை சில ஆண்டுகளுக்கு பயிரிடுங்கள்" என்று அறிவுறுத்தி உள்ளார்.

அதனால், இந்தாண்டு கடந்த செப்டம்பர் மாதம் பெய்த மழையில் நிலத்தை உழுது பக்குவப்படுத்தி நிலக்கடலைக்கு மாற்றாக மானாவாரி பயிர்களான குதிரைவாலி, உளுந்து, தட்டைப் பயறு ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர்.

இந்த பயிர் விளைச்சலாகி அறுவடைக்கு தயாரான நிலையில் இதிலும் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு உளுந்து, தட்டைப்பயிர்கள் சேதமடைந்து விட்டது. குதிரைவாலி கதிரையும் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி விட்டது.

இதுகுறித்து ஓடாத்தூரைச் சேர்ந்த விவசாயிகள் கூறியது: "வேளாண் அலுவலர்களின் அறுவுறுத்தலின்படி இந்தாண்டு கடந்த செப்டம்பர் மாதம் பெய்த மழையின் ஈரப்பதத்தை பயன்படுத்தி இரண்டு ஏக்கரில் குதிரைவாலியும், 50 சென்டில் உளுந்தும், அவற்றிற்கு இடையே ஊடுபயிராக தட்டப்பயிறும் பயிரிட்டோம்.

சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மேற்கண்ட பயிர் நல்ல விளைச்சலாகி அறுவடைக்கு தயாரானபோது, பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு சேதமடைந்தது. மேலும், குதிரைவாலி பயிரைக் காட்டுப் பன்றிகள் இரவோடு இரவாக பறித்து தின்றும், செடியை தாறுமாறாக ஒடித்து நாசப்படுத்தியும்விட்டது.

இதனால், பயிரிடப்பட்ட நிலத்தில் சுமார் 20 குவிண்டால் வர வேண்டிய குதிரைவாலி, அரைக் குவிண்டால் கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் வேளாண்துறை அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் மூலம் இந்தப் பகுதியில் உரிய ஆய்வை மேற்கொண்டு பாதிப்பு ஏற்பட்ட பயிருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கினால் விவசாயிகள் நட்டத்தில் இருந்து ஓரளவாவது பயன்பெறுவோம்" என்று தெரிவித்தனர்.

click me!