ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்; பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு...

First Published Dec 20, 2017, 8:40 AM IST
Highlights
People who besieged Taluk office demanding the removal of occupations Smooth remedy in dialogue ...


சிவகங்கை

சிவகங்கையில் உள்ள தென்றல் நகரில் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தென்றல் நகரில் அரசு நிலத்தில் ஒரு பிரிவினர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டியிருந்தனர். இதுகுறித்து மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி அந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் வருவாய்த் துறையினரால் அகற்றப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று தென்றல் நகரை சேர்ந்த மக்கள், தென்றல் நகர் வழியாக ஐயனார் கோவில் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஊர்வலமாக வந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுப்பினர்கள் தலைமைத் தாங்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் சந்தானலட்சுமி மற்றும் காளையார்கோவில் காவலாளர்கள் முற்றுகையிட முயன்ற மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, "கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு இடத்தில் கட்டிடம் இருந்ததால் அது நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டது. அந்த கட்டிடம் ஐயனார் கோவில் கண்மாய்க்கு செல்லும் வரத்துக்கால்வாய் ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதால் அகற்றப்பட்டது. இதேபோல் அந்த வரத்துக்கால்வாயில் உள்ள மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" என்று அவர்கள் கூறினர்.

இதனையடுத்து, "ஒரு வாரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து மக்கள் முற்றுகைப் போராட்டதை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

click me!