காவலர்களை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல்; பிரச்சாரத்தை தடுத்ததால் ஆவேசம்...

First Published Apr 28, 2018, 6:20 AM IST
Highlights
Farmers sudden road blockade condemn police


தருமபுரி
 
தருமபுரியில் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்ட விவசாயிகளை பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது என்று காவலாளர்கள் தடுத்ததால் ஆவேசமடைந்த விவசாயிகள் காவலாளர்களை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

இந்த விழிப்புணர்வு பயணத்திற்கு அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்குகிறார். இந்த குழுவினர் நேற்று தருமபுரி மாவட்டம் வழியாக சுற்றுப்பயணம் செய்தனர். 

தருமபுரி நான்கு சாலை அருகே இந்த குழுவினர் மக்களிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக பிரச்சாரம் செய்யக் கூடாது என்று கூறிய காவலாளர்கள் இருசக்கர வாகன குழுவினரை சாலையின் ஓரத்திற்கு வருமாறு வலியுறுத்தினர்.

இதனால் ஊர்வலத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கும், காவலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆவேசமடைந்த விவசாயிகள் காவலாளர்களைக் கண்டித்து பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது காவலாளர்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளிடம் காவல் துணை கண்காணிப்பாளர் காந்தி மற்றும் காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள் குழுவினர் மீண்டும் மோட்டார் சைக்கிள்களில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!