
பெரம்பலூர்
பெரம்பலூரில் உள்ள நீர் நிலைகளில் விவசாயிகள் தங்களது சொந்த பயன்பாட்டிற்காக மணல் எடுத்துக்கொள்ள அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில், "மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில், விவசாயிகள் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக மணல் எடுத்துக்கொள்ள உரிய அனுமதி பெற வேண்டும்
நீர் நிலைகளில் விவசாயிகள் தங்களது சொந்த பயன்பாட்டுக்கு மட்டும் வண்டல் மண், சௌடு மண், கிரவல் மண் ஆகியவற்றை விவசாயம், சொந்த வீடு மற்றும் மண்பாண்டம் தயாரிப்பு ஆகியவற்றிற்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
அதுவும், அரசு விதிகளின்படி அந்தந்த பகுதி வட்டாட்சியருக்கு மனு அளித்து, 31.03.2019 ஆம் தேதி வரை எடுத்துக்கொள்ளலாம்.
குத்தகைதாரர் எனில் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழை இணைத்து, கனிமத்தை இலவசமாக பெற்றுக்கொள்ள ஆட்சியரின் முன் அனுமதி பெறவேண்டும்.
அதன்படி, அனுமதியானது 20 நாள்களுக்கு மிகாமல் வழங்கப்படும். அனுமதிதாரர் தனக்கு அனுமதி வழங்கப்பட்ட ஏரி, குளத்திலிருந்து அவரது சொந்த செலவில் டிராக்டரைக் கொண்டு கனிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.