அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் - பின்வாங்க மறுக்கும் விவசாயிகள்

First Published Apr 4, 2017, 4:53 PM IST
Highlights
farmers denied to withdraw protest in delhi


கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்க்கத்தக்கது எனவும், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய சிறு-குறு கடன்களை ரத்து செய்வதாக கடந்த ஆண்டு தமிழ் நாடு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அரசாணை வெளியிட்டது.

அதில் ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் மற்றும் நகைக்கடனை தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தது.

இது பார பட்சமாக உள்ளதாகவும், அனைத்து விவசாயிகளின் பெயரில் உள்ள கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யா கண்ணு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு சலுகை வழங்கும்போது அதில் பாரபட்சம் காட்டக்கூடாது எனவும், 5 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் கடன் மற்றும் பயிர் கடன்களை ரத்து செய்வதை ஏற்க முடியாது எனவும், 3 மாதத்திற்குள் தமிழக அரசு அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இதுகுறித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யா கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்க தக்கது எனவும், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், அதுவரை போராட்டம் தொடரும் எனவும் குறிபிட்டார். 

click me!