
கடலூர்
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வைத்துள்ள நகைகள் மீதான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கடலூர் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தின் பக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய துணைச் செயலர் எம்.பழனிவேல் தலைமைத் தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "சாத்தனூர் அணையில் இருந்து அரசூர் வரை உள்ள மலட்டாறில் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.
சாத்தனூர் அணையில் இருந்து நத்தம், சிறுகிராமம், வீரப்பெருமாநல்லூர், திருவாமூர், மணப்பாக்கம், சேமக்கோட்டை, சிறுவத்தூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 15 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து, 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்களைப் பாதுகாக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனுக்கான அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.
குறுகிய கால கடனை மத்திய காலக் கடனாக மாற்ற வேண்டும்.
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வைத்துள்ள நகைகள் மீதான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் ஜி.மாதவன், பொருளாளர் எஸ்.தட்சணாமூர்த்தி, ஒன்றியச் செயலர் டி.ஜெகதீசன், பொருளாளர் பி.குமரகுருபரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் ஏ.பன்னீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் தனபால், ஒன்றியக் குழு ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.