
விழுப்புரம்
கொள்முதல் செய்த உளுந்து, நெல் மூட்டைகளுக்கு பணப்பட்டுவாடா செய்யக்கோரி விழுப்புரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்களது நிலத்தில் விளைந்த நெல், மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட தானியங்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு செல்வது வழக்கம்.
கடந்த சில நாட்களாக இந்த ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துக்கு நெல், உளுந்து மூட்டைகளின் வரத்து அதிகமாக காணப்படுகிறது. நேற்றும் ஏராளமான விவசாயிகள், உளுந்து, நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இவற்றை கொள்முதல் செய்த வியாபாரிகள், விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யவில்லை.
இதுகுறித்து விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் அலுவலத்துக்கு சென்று முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், உடனடியாக பணப்பட்டுவாடா செய்யக்கோரி உளுந்தூர்பேட்டை - சென்னை சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கம், பாலமுரளி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, "இதுகுறித்து விற்பனைக்கூட அதிகாரிகளிடம் பேசி உடனடியாக பணப்பட்டு வாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர். இதனையேற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.