நன்கொடை தரலென்னா காவல்நிலையத்தில் பொய்ப் புகார் – நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் ஆட்சியரிடம் மனு…

First Published Sep 27, 2017, 9:03 AM IST
Highlights
False complaint to donation tenderellah police station - Peoples gave petition to collector


விழுப்புரம்

எலவனாசூர்கோட்டையில் நன்கொடை தராதவர்கள் மீது காவல்நிலையத்தில் பொய்ப் புகார் தரும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஊராட்சி துணைத் தலைவர் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், எலவனாசூர்கோட்டை முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சம்ஷத் தலைமையில், அதிமுக, பாமக, விசிக, திமுக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், “எலவனாசூர்கோட்டையில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களிடம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த கட்சியினர் சிலர் நன்கொடை கேட்டு மிரட்டுவதுடன், கொடுக்காதவர்கள் மீது காவல் துறையில் புகார் கொடுத்தும் வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீனுவாசன் உள்ளிட்ட சிலர், எலவனாசூர்கோட்டை மின்வாரிய அலுவலர் ரங்கராஜன் மீது பொய்ப் புகார் கொடுத்து, காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பிரசுரங்கள் ஒட்டினர். அந்த புகாரில் இப்படிக்கு, எலவனாசூர்கோட்டை பொதுமக்கள் என்றும் அச்சிட்டிருந்தனர்.

இதனை அறிந்த நாங்கள், ஊராட்சி மக்களுக்குத் தெரியாமல் பொய்யான தகவலை காவல்துறை, கோட்டாட்சியர், வட்டாட்சியருக்கு தெரிவித்து கட்சியினர் அறிவித்துள்ள போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தோம்.  

இதன் காரணமாக போராட்டம் தடைபட்டதால், 10 ஆண்டுகள் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதாக, மின்வாரிய அலுவலர் ரங்கராசன் மீது, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கூட்டத்தில் சீனுவாசன் பொய்ப் புகார் தெரிவித்துள்ளார்.

ரங்கராஜன் மீது எவ்வித புகாரும் இல்லை. அவர் வந்த பிறகு, கிராம மக்கள் துணையோடு, மின்கம்பிகள் மீதுள்ள மரங்களை அகற்றுவது, சீரமைப்பது, புதிய துணை மின்நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைக்கு உதவி வருகிறார். மின்சாரப் பிரச்சனையின்றி எங்கள் பகுதி உள்ளது.

அரசுத் துறையினர், ஊராட்சி மக்களிடம் நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில், நன்கொடை தராத காரணத்தால் இதுபோன்ற பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஆட்சியர் விசாரித்து உண்மை நிலையறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.

அந்த மனுவைப் பெற்ற ஆட்சியர் இல.சுப்பிரமணியன் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுத் தெரிவித்தார்.

click me!