
வேலூர்
மேல்மொணவூர் பாலாற்றில் மணல் குவாரிக்கு அமைப்பதால் பாதிக்கப்படும் 22 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் 100 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
வேலூரை அடுத்த மேல்மொணவூர் பாலாற்றில் மணல்குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இங்கிருந்து லாரிகளில் மணல் எடுத்து செல்வதற்காக நீர்வரத்து கால்வாய்களை மூடி அதன் வழியாக பாதை அமைக்கப்படுகிறது.
இதனால் கடப்பேரி, பெரிய ஏரி உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளுக்கு நீர்வரத்து பாதிக்கப்படுவதுடன் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
மேலும், பத்து ஊராட்சிகளைச் சேர்ந்த 22 கிராமங்களுக்கு செல்லும் கூட்டுக் குடிநீர் விநியோகமும் தடைபடும் என்பதால் மணல்குவாரி அமைப்பதற்கு மேல்மொணவூர், மோட்டூர், அன்பூண்டி, ஆவாரம்பாளையம், இராமாபுரம், கனிகாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் அவர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் பாதையை சீரமைக்கும் பணி நடைப்பெற்றது. இதனை அறிந்த மக்கள் மணல் குவாரி அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். அதன்படி நேற்று பாதிப்புக்கு உள்ளாகும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மேல்மொணவூர் அருகே பாதை அமைக்கும் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திரண்டு அங்குப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்கள் சாப்பிடுவதற்காக சமையலும் செய்யப்பட்டது.
இதனை அறிந்ததும் அங்கு 50-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் குவிக்கப்பட்டனர். ஆனாலும் கிராமமக்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தனர். அவர்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மணல் குவாரிக்கு செல்லும் பாதையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை காவலாளர்கள் கைது செய்தனர்.